குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Wednesday, 9 January 2013

தீலிப் ரஹ்மான் ஆனா கதை


வணக்கம்

கண்டிப்பாய் இதை நான் எழுதவில்லை.ஆனாலும் படிக்க சுகமாய் இருந்ததால் இதை அப்படியே கொடுக்கிறேன்.

அந்த 11 வயதுச் சிறுவன் கோடம்பாக்கத்தில் ஒரு ரிக்கார்டிங் ஸ்டுடியோவின் வாசலில் தயங்கியபடி உள்ளே செல்கிறான்.

அவனுக்காகப் பல வாத்தியக்காரர்கள் காத்திருக்கிறார்கள். ''வாப்பா திலீப்... உனக்காகத்தான் காத்துட்டிருக்கோம். நீ கொண்டுவந்த சிந்தசைஸர்ல என்னவோ பிரச்னை. என்னன்னு பாரேன்'' என்கிறார் அர்ஜுனன் மாஸ்டர்.

சிறுவன் திலீப் அந்தக் கருவியின் பாகங்களைத் தொழில்நுட்ப நேர்த்தியுடன் அழகாக
 பிரிக்கிறான். எதையோ சரிசெய்து ஒன்று சேர்க்கிறான். சில நிமிடங்களில் அது மீண்டும் நன்றாக வேலை செய்ய ஆரம்பிக்கிறது.

அர்ஜுனன் மாஸ்டர் அவனை அன்புடன் அணைத்துக்கொள்கிறார்... ''கில்லாடிடா நீ!'' திலீப்பின் கண்கள் கலங்கியிருக்க, அவரும் மனம் கலங்குகிறார்.

''என்ன திலீப், அப்பா ஞாபகம் வந்திடுச்சா..?'' என்பவர், பெருமூச்சுவிடுகிறார். ''என்ன செய்றது... விதின்னுதான் சொல்லணும். சாகிற வயசா மனுஷனுக்கு? இப்பவும் உன் அப்பா இங்கேயே இருக்கிற மாதிரிதான் தோணுது திலீப்'' என்பவர், சிறுவனின் கைகளில் சில ரூபாய் நோட்டுகளைக் கொடுக்கிறார்.

யூனிவோக்ஸ், கிளாவியோலின் போன்ற மின் இசைக் கருவிகளை வாடகைக்கு விட்டதற்காகக் கொடுக்கப்படும் சிறிய தொகை அது.

`திலீப் அந்தப் பணத்தில் தன் சகோதரிகளுக்காக சாக்லேட்டுகளும் பிஸ்கட்டுகளும் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வருகிறான். அம்மாவிடம் மிச்சப் பணத்தைக் கொடுக்கிறான். அவனைப் பார்க்கப் பார்க்க, அம்மாவின் மனம் நெகிழ்கிறது. 'சின்னப் பையன் மேல குடும்பப் பாரம் விழுந்துவிட்டதே! படிக்க வேண்டிய பையனை இப்படி ரிக்கார்டிங் தியேட்டர்களுக்கு அனுப்புகிறோமே' என்கிற வருத்தம்.

ஆனால், சிறுவன் திலீப்பின் கண்களில் மின்னிய விவரிக்க இயலாத ஒளியைக் கண்டபோது, அவன் சரியான பாதையில்தான் போகிறான் என்று அந்தத் தாயின் மனதுக்குப் புரிந்தது.

திலீப் பொதுவாக வீட்டில் யாருடனும் கலகலப்பாகப் பேச மாட்டான். வீடெங்கும் இறைந்துகிடக்கும் இசைக் கருவிகளும், இசைப்பதிவு இயந்திரங்களும்தான் அவனுக்குப் பிடித்த உலகம். தன் அறைக்குச் சென்று அவற்றை வாசிப்பதிலும் பிரித்துப் போட்டு மீண்டும் ஒன்று சேர்ப்பதும்தான் அவனுடைய விருப்பமான ஒரே விளையாட்டு.

மற்றபடி நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவது, சினிமா, அரட்டை போன்ற வேறு பொழுதுபோக்குகள்..? ம்ஹூம்... எதுவும் இல்லை.

திலீப் தன் அறைக்குச் சென்று ஹார்மோனியத்தில் ஒரு பாட்டை வாசிக்க ஆரம்பிக்கிறான். அது அவனுடைய அப்பா இசையமைத்த ''பெத்லஹேமில் ராவில்...'' என்கிற பிரபல மலையாளப் படப் பாட்டின் மெட்டு.

அவன் வாசிப்பதைக் கேட்கும் அம்மா, தன் கணவரே நேரில் வந்ததைப் போல் மெய்ம்மறந்துபோகிறார். அந்த மெட்டில் அவன் சில மாற்றங்களையும் செய்து மிக இனிமையாக வாசிப்பதைக் கேட்கும்போது அந்தத் தாய்க்குச் சிலிர்க்கிறது. ஓடி வந்து தன் மகனை நெஞ்சார அணைத்துக்கொள்கிறார். அவர் கண்களில் கண்ணீர் வழிகிறது. ''நீ வாசிக்கிறதைக் கேக்கும்போது சந்தோஷமா இருக்குப்பா... ஆனா, கொஞ்சம் பயமாவும் இருக்கு.


 ''பயமா... ஏம்மா?'' ''உங்கப்பா ரொம்ப திறமைசாலிப்பா. எவ்வளவோ உயரத்துக்குப் போயிருக்க வேண்டியவரு. இந்த உலகம்தான் அவரைக் கடைசி வரை புரிஞ்சுக்கலை. இவ்வளவு சின்ன வயசுல உனக்கு இருக்கிற திறமை எனக்குத் தெரியுது.

ஆனா, உலகம் புரிஞ்சுக்குமான்னு பயமா இருக்கு'' என்கிறார் வாழ்க்கையின் பல பிரச்னைகளைப் போராட்டத்துடன் கடந்து வந்த அந்தப் பாசமிகு அம்மா.

உலகம் அந்தச் சிறுவனைப் புரிந்துகொண்டது.
இருகரம் நீட்டி அந்த இளம் இசை மேதையை வரவேற்கக் காத்திருந்தது.

அவனுக்கான பிரகாசமான எதிர்கால வெற்றிப் பாதை ஏற்கெனவே அமைக்கப்பட்டுவிட்டது.

நான்கு வயதிலேயே பெற்றோர்களால் பியானோ வகுப்புகளுக்கு அனுப்பப்பட்ட சிறுவன் திலீப், விரைவில் பள்ளிப் படிப்பைவிடப் போகிறான்.

தனராஜ் மாஸ்டரிடம் இசை கற்று, லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியில் ஸ்காலர்ஷிப் பெற்று, மேற்கத்திய கிளாசிக்கல் இசையில் பட்டம் பெறப்போகிறான்.
ரூட்ஸ், நெமிஸிஸ் அவின்யூ, மாஜிக் போன்ற சென்னை ஆங்கில இசைக் குழுக்களில் பங்கேற்கும் வாய்ப்பு அவனுக்குக் கிடைக்கப் போகிறது.

இன்னும் ஒரு சில வருடங்களில் எம்.எஸ்.வி, இளையராஜா போன்ற மாபெரும் இசைஅமைப்பாளர்களுக்கு கீ- போர்டு பிளேயராகவும், சில சமயங்களில் இசை கோப்பாளராகவும் பணியாற்றப்போகிறான்.

அவனுடைய திறமை விக்கு விநாயக் ராம், குன்னக்குடி வைத்தியநாதன், ஜாகிர் ஹுசேன் போன்றவர்களுடன் சேர்த்துவைக்கப்போகிறது.

அவர்களுடன் கச்சேரிகளில் பங்கேற்க உலகப் பயணம் செல்வான்.

அதன் பிறகு, 300-க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களுக்கு இசை அமைப்பான்.

'பஞ்சதன்' என்கிற பெயரில் சொந்தமாக ஒரு ஹைடெக் ரிகார்டிங் ஸ்டுடியோவைக் கட்டுவான்.

அங்கேதான் இயக்குநர் மணிரத்னத்தைச் சந்திப்பான்.

'ரோஜா' என்கிற படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு அவனுக்குத் தரப்படும்.

அந்த இசையமைப்பு இந்தியத் திரை இசையின் ஸ்டைலையே மாற்றி அமைக்கும்.

முதல் படத்திலேயே தேசிய விருது பெறுவான்.

சொந்த வாழ்க்கையில் நடந்த சில புதிரான நிகழ்வுகளின் தொடர்ச்சியாக, அப்போது அவன் பெயரும் மாற்றம் செய்யப்பட்டிருக்கும்.

திலீப் என்கிற இளைஞன் ஏ.ஆர்.ரஹ்மான் என்கிற இசைக் கனவானாக மாறுவார்.

'ரோஜா'வில் ஆரம்பிக்கப் போகும் அந்த மகத்தான இசைக் கனவு ஆஸ்கர் விருதையும் கடந்து செல்லும்.

( ஆச்சரியம் .. ஆனால் உண்மை )

இளையராஜா திலீபின் அப்பாவிடம் கீபோர்டு வாசித்தார். திலீப் ஏ.ஆர்.ரஹ்மான் ஆனபின் இளையராஜாவிடம் கீபோர்டு வாசித்தார், இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர்ராஜா ஏ.ஆர் ரஹ்மானிடம் கீ போர்டு வாசித்தார்.
.

மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா 

1 comment:

  1. "இளையராஜா திலீபின் அப்பாவிடம் கீபோர்டு வாசித்தார்"
    தவறான தகவல். கிற்றார்தான் வாசித்தார்.

    " இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர்ராஜா ஏ.ஆர் ரஹ்மானிடம் கீ போர்டு வாசித்தார்."

    ஒரு போதும் வாசிக்கவில்லை.

    ஒரு தகவல் போடும் போது கொஞ்சமாவது உறுதிப்படுத்தி விட்டு போட முயற்சி செய்யுங்கள்

    ReplyDelete

கருத்து மேடை